search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை ஆய்வாளர் வீட்டில் கொள்ளை"

    மன்னார்குடியில் சாலை ஆய்வாளர் வீட்டின் கதவை உடைத்து 25 பவுன் நகைகளையும், ரூ.17 ஆயிரத்தையும் கொள்ளையடித்து கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    சுந்தரக்கோட்டை:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே உள்ள சோனாநகரில் வசித்து வருபவர் காமராஜ் (வயது38). இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி யோகலட்சுமி (37). இவர் மன்னார்குடியில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் சாலை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள்.

    கடந்த 11-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றிருந்த இவர்கள், நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டின் அறைக்குள் சென்று பார்த்தனர். அங்கு இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி கிடந்தன.

    பீரோவில் இருந்த 25 பவுன் நகைகள், ரூ.17 ஆயிரத்தை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தஞ்சையில் இருந்து வந்த தடயவியல் நிபுணர்கள் வீட்டை சோதனையிட்டு, பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். இதுகுறித்து மன்னார்குடி போலீஸ் நிலையத்தில் காமராஜ் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 25 பவுன் நகைகள், ரூ.17 ஆயிரத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். சாலை ஆய்வாளர் வீட்டில் நகை, பணத்தை துணிகரமாக கொள்ளையடித்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×